india

img

நவராத்திரி பண்டிகை – போபாலில் இறைச்சி விற்பனைக்கு தடை

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் நவராத்திரி பண்டிகையையொட்டி, இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதித்து அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

நவராத்திரி பண்டிகை நேற்று தொடங்கி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. இந்துக்களால் கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகையையொட்டி, மத்தியப் பிரதேசத்தின் போபாலில் அக்.2-ஆம் தேதி வரை, இறைச்சி, மீன் மற்றும் முட்டை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, போபால் எஸ்டிஎம் (Sub Divisional Magistrate ) திவ்யா படேல் பிறப்பித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் மைஹார், உமாரியா உள்ளிட்ட பிற பகுதிகளிலும் இதேபோன்ற தடை விதிக்கப்பட்டது.

அதே போல், உத்தரபிரதேசத்தின் ஹர்பூரில், அசைவ உணவு வழங்கும் உணவகங்கள் மற்றும் இறைச்சிக் கடைகளை அக்டோபர் 2 ஆம் தேதி வரை மூட காவல்துறை உத்தரவிட்டது.

ஹரியானா மாநிலம் குருகிராமிலும் இதே போன்ற தடையை விதிக்க வேண்டும் என அப்பகுதியின் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையில் மனு அளித்துள்ளனர்.

பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இது போன்ற உணவு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதற்கு சமுக வலைதளத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.

 இது தொடர்பாக, ஐஏஎன் எஸ் செய்தி நிறுத்திற்கு சிபிஎம் எம்.பி அம்ரா ராம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

“நாடு முழுவதும் இறைச்சி அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது; 50% க்கும் அதிகமான மக்கள் அதை உட்கொள்கிறார்கள். யார் என்ன சாப்பிடுவது அல்லது என்ன உடை அணிவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் தாங்களாகவே முடிவு செய்யும் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. யார் எந்த மதத்தைப் பின்பற்றுவார்கள், அல்லது அவர்கள் என்ன நடைமுறைகளைக் கடைப்பிடிப்பார்கள் - அது முற்றிலும் அவர்களின் விருப்பம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.